உழைப்போம்

Thursday, November 7, 2013

மின் வாரியத்தில் 6,000 பேர் நியமனம் - தின மலர் செய்தி.

மின்சார வாரியத்தில், புதிதாக, 6,000 பேரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, தகுதியான நபர்கள், நேர்காணலில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதம் விரைவில் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில், கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், உதவி பொறியாளர் என, 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தற்போது, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், மின் உற்பத்தி, வினியோகம், பராமரிப்பு, மின் கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்வதில், தொடர் சிக்கல் நிலவுகிறது. இதையடுத்து, புதிதாக, 4,000 கள உதவியாளர்; 1,000 கணக்கீட்டாளர்; 275 உதவி பொறியாளர்; 1,000 தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட, 6,275 பணி இடங்கள், இந்த மாதம் மற்றும் அடுத்த மாதத்திற்குள் நிரப்ப, மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. ஒரு பதவிக்கு, ஐந்து நபர் என்ற அடிப்படையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பட்டியல் பெறப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. அதன் அடிப்படை யில், தகுதியான நபரை, நேர்காணலுக்கு அழைக்க, விரைவில் அழைப்பு கடிதம் அனுப்பப்பட உள்ளது. மின்சார வாரியத்தில், 'அப்ரென்டிஸ்ஷிப்' பயிற்சி முடித்தவர்கள், நேர்காணலில் பங்கேற்க, நேரடியாக அழைப்பு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மின் வாரிய ஊழியர்கள் கூறுகையில், 'பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதால், மூன்று, நான்கு பேர் செய்ய வேண்டிய வேலைகளை, ஒருவர் செய்ய வேண்டியுள்ளது. நடப்பாண்டில், 'அப்ரென்டிஸ்ஷிப்' முடித்த பட்டம் மற்றும் பட்டய பொறியாளர்களையும், நேர்காணலுக்கு அழைக்க வேண்டும்' என்றனர்.

'பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்':

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்வி, கூடுதல் தகுதி போன்றவற்றின் அடிப்படையில் தான், புதிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே, அமைச்சர், அமைச்சர் உதவியாளர், எம்.எல்.ஏ., அவரின் உதவியாளர், அரசியல் பிரமுகர்கள், இடைத்தரகரகள் என, யாரிடமும் வேலைக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். யாராவது, 'பணம் கொடுங்கள்; வேலை வாங்கி தருகிறேன்' என்று சொன்னால், முதல்வர் தனி பிரிவில் புகார் செய்யுங்கள். இவ்வாறு, அவர் கூறினார்.