உழைப்போம்

Friday, October 18, 2013

மழைக் காலங்களில் மின் விபத்து தடுப்பு: மக்களுக்கு வேண்டுகோள்

பருவ மழைக் காலங்களில் மின் விபத்துக்களைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் செயல்பட வேண்டும் என்று மின் ஆய்வுத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

மின் விபத்துகளைத் தவிர்ப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை கிண்டி திரு.வி.க. தொழிற்பேட்டை அரசு தலைமை மின் ஆய்வாளர் வெளியிட்ட அறிக்கை:
பொதுமக்கள் அரசு முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை பயன்படுத்த வேண்டும். மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்பும், எடுப்பதற்கு முன்பும் சுவிட்சை அணைத்து விட வேண்டும்.
கேபிள் டி.வி வயர்களை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் கொண்டு செல்லக் கூடாது.
வீடுகளில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின் பராமரிப்புப் பணிகளை கண்டிப்பாக மேற்கொள் வேண்டும்.
மின் கம்பத்திலோ அல்லது அவற்றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டக்கூடாது.
ஒவ்வொரு வீட்டிற்கும் சரியான நில இணைப்பு (எர்த் பைப்) அமைப்பதுடன் அதனை குழந்தைகள் மற்றும் விலங்குகள் தொடாத வகையில் சரியாக பராமரிக்க வேண்டும்.
பழுதடைந்த மின்சாதனங்களை உபயோகிக்கக் கூடாது. உடைந்த சுவிட்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்ற வேண்டும். மழைக் காலங்களில் மின் மாற்றிகள், மின்கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம்.
மேல்நிலை மின்சார கம்பிகளுக்கு அருகில் கட்டடங்களை கட்டும்போது போதுமான இடைவெளி விட்டு கட்ட வேண்டும். அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் மின்சார வாரியம், மின்சார ஆய்வுத்துறை அலுவலர்களை அணுக வேண்டும்.
மின்கசிவு உள்ளிட்ட அவசர நேரங்களில் மின் இணைப்பினை துண்டிப்பதற்கு வசதியாக சுவிட்சுகளின் இருப்பிடத்தை அமைக்க வேண்டும்.
தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுவிட்சை அணைத்து விட வேண்டும். எதிர்பாராதவிதமாக மின்சாரக் கோளாறு ஏற்பட்டு தீ எரிந்தால் அதை தண்ணீரைக் கொண்டு அணைப்பதற்கு முயற்சி செய்யக்கூடாது.
மழையாலும், காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சாரக் கம்பி அருகே பொதுமக்கள் செல்லக்கூடாது. அது குறித்து அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இடி, மின்னல் போன்றவை ஏற்படும்போது உடனடியாக கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டடம், கார், வேன் போன்ற வாகனங்களில் தஞ்சமடைய வேண்டும். அந்த நேரத்தில் குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, பேருந்து நிறுத்தத்திலோ தஞ்சமடையக் கூடாது. மேலும் டி.வி, மிக்ஸி, கிரைண்டர், கம்ப்யூட்டர், தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


No comments :

Post a Comment