உழைப்போம்

Thursday, October 24, 2013

தமிழகத்தில் விரைவில் அமலுக்கு வருகிறது மின் கட்டணம் எவ்வளவு என்பதை செல்போனில் தெரிந்து கொள்ளும் வசதி

தமிழகத்தில் மின் கட்டணம் எவ்வளவு என்பதை இனிமேல் செல்போனில் தெரிந்து கொள்ளும் வசதியை மின்வாரியம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக தங்களது செல்போன் எண்ணை அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பதிவு செய்தால் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்) மூலம் தகவல் தரப்படும்.

மின் நுகர்வோர்களுக்கு வசதி   தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் இதர பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு உபயோகிக்கப்படும் மின் அளவுக்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 2 மாதத்திற்கு ஒருமுறை மின்வாரியத்தில் பணிபுரியும் கணக்கீட்டாளர்கள் ஒவ்வொரு வீடுகளுக்கு சென்று மின் அளவை கணக்கீடு செய்து எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பதை அதற்குண்டான அட்டையில் பதிவு செய்து கொடுப்பார்கள். அதன்பிறகு கடைசி தேதிக்குள் முன்பாக சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்டணத்தை மின் நுகர்வோர்கள் செலுத்தி ரசீது பெற வேண்டும்.
இது ஒருபுறம் இருக்க, குறிப்பிட்ட தேதிக்குள் நுகர்வோர்கள் மின் கட்டணம் செலுத்த வில்லை என்றால் இரட்டிப்பு பணம் வசூலிப்பது அல்லது மின் இணைப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது போன்ற நடவடிக்கையில் மின்வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஒரு சிலர் பல்வேறு காரணங்களால் மறதியாக, கடைசி தேதிக்குள் மின்கட்டணத்தை செலுத்த தவறி விடுவதுண்டு.
செல்போன் எண்கள் பதிவு     இந்தநிலையில், தமிழ்நாடு மின்வாரியம் மூலம் மின் நுகர்வோர்கள், தங்களது செல்போன் எண்களை சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளிடம் பதிவு செய்து கொண்டால் மின் கட்டணம் மற்றும் மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி தேதி பற்றிய விவரங்களை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் உடனடியாக தங்களது அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்று மின் இணைப்பு முகவரியை கூறி, செல்போன் எண்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறுஞ்செய்தி மூலம் தகவல்  இது குறித்து சேலம் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் கண்ணன் கூறியதாவது:–  மின் நுகர்வோர்கள் சில நேரத்தில் குறிப்பிட்ட தேதியில் மின் கட்டணத்தை செலுத்த மறந்து விடுகிறார்கள். இதனால் தேவையில்லாமல் இரட்டிப்பு தொகை செலுத்த நேரிடும். எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் தங்களுடைய செல்போன் எண்ணை பதிவு செய்யும் மின் நுகர்வோர்களுக்கு மதிப்பு கூட்டு சேவையாக குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் அவர்களுடைய மின் கட்டணம் மற்றும் மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படும்.
சேலம் மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 7½ லட்சம் மின் இணைப்புகள் உள்ளது. இந்த புதிய திட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது. எனவே, மின் நுகர்வோர்கள் இந்த வசதியை பெற தங்களுடைய செல்போன் எண்ணை மின்வாரிய பிரிவு அலுவலகங்களில் பதிவு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments :

Post a Comment