உழைப்போம்

Friday, October 25, 2013

புதிய அனல் மின் நிலையங்களை துவக்குவதில் அரசு தீவிரம். தினமலர் செய்தி.

செய்யூர், உடன்குடி அனல் மின் நிலைய திட்ட பணிகளை விரைவாக மேற்கொள்ள, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள, முன்னணி நிறுவனங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 


ரூ.18 ஆயிரம் கோடி:
மத்திய அரசு, 'அல்ட்ரா மெகா பவர் புராஜக்ட்' என்ற திட்டத்தின் கீழ், தனியார் பங்களிப்புடன், தமிழகத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரில், 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 4,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, அனல் மின் நிலையம் அமைக்க முடிவு செய்தது.இதற்கான அறிவிப்பு முறைப்படி, கடந்த, 2008ல் வெளியிடப்பட்டது. எனினும், தமிழக அரசு, 2010ம் ஆண்டில் தான் ஒப்புதல் வழங்கியது.மத்திய எரிசக்தி துறையின் கீழ் இயங்கும், பவர் பைனான்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான, 'கோஸ்டல் தமிழ்நாடு பவர் லிமிடெட்'ன் கீழ், இத்திட்டத்திற்கான பணிகள் துவங்கப்பட்டன.அனல் மின் நிலையம் அமைப்பதற்காக, செய்யூர் தாலுகாவில் உள்ள சித்தர்காடு, கங்காதேவன் குப்பம், வேடல், விளங்காடு, செய்யூர் சூடி' பிளாக் உள்ளிட்ட கிராமங்களில், 1,111 ஏக்கர் நிலம் பயன்படுத்தப்பட உள்ளது.
223 ஏக்கர் நிலம்:
செய்யூர் அனல் மின் நிலையத்தில், மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு, வெளிநாடுகளில் இருந்து, சிறப்பு வகை நிலக்கரி இறக்குமதி செய்யப்பட உள்ளது. இதற்காக, 83 ஏக்கர் நிலமும், சாம்பல் குட்டைக்கு, 223 ஏக்கர் நிலமும் பயன்படுத்தப்பட உள்ளது.செய்யூர் அனல் மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மொத்தம், 4,000 மெகாவாட் மின்சாரத்தில், தமிழகத்திற்கு, 1,600 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆந்திரா, 400; மகாராஷ்டிரா, 400; கர்நாடகா, 800; கேரளா, 300 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும். எஞ்சிய மின்சாரம், சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தை ஆராய அமைக்கப்பட்ட நிபுணர் குழு, 'செய்யூர் அனல் மின் நிலையத்தால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது' என, கடந்த மே, 20ம் தேதி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம், தனது பரிந்துரையை வழங்கியது.இருப்பினும், பல மாதங்களாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி தராமல் இழுத்தடித்து வந்தது.
இந்நிலையில், செய்யூர் அனல் மின் நிலையம் அமைக்க, கடந்த மாதம், 30ம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, இத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான, 'டெண்டர்' கடந்த வாரம் வெளியிடப்பட்டது.இதில், எல் அண்டு டி, அதானி, என்.டி.பி.சி., சிந்தால், ஜே.எஸ்.டபிள்யூ., உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதையடுத்து, டெண்டரை பெற, நாட்டின் முன்னணி நிறுவனங்கள் இடையே, கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
800 மெகாவாட்:
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில், உடன்குடியில், பி.எச்.இ.எல்., நிறுவனத்துடன் இணைந்து, தலா, இரண்டு அலகுகள் மூலம், 800 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க, தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்தது.இத்திட்டத்தை செயல்படுத்துவதில், பி.எச்.இ.எல்., நிறுவனம் ஆர்வம் காட்டாததால், 'தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம், உடன்குடி அனல் மின் நிலையம் அமைக்கப்படும். இங்கு, தலா, 660 மெகாவாட் மின் உற்பத்தித்திறன் கொண்ட, இரண்டு அலகுகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செயப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது.இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்த நிறுவனத்தை, தேர்வு செய்வதற்காக, கடந்த ஏப்ரல் மாதம், 'டெண்டர்' வெளியிடப்பட்டது.இதில், சீனாவை சேர்ந்த, 'செப்கோ', பி.எச்.இ.எல்., உள்ளிட்ட, நான்கு நிறுவனங்கள் பங்கேற்றன. தொழில்நுட்ப விவரங்கள் அடங்கிய டெண்டர் திறக்கப்பட்ட நிலையில், சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காததால், அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தமிழக அரசின் தொடர் வலியுறுத்தல் காரணமாக, கடந்த, 14ம் தேதி, சுற்றுச்சூழல் அமைச்சகம், உடன்குடி அனல் மின் நிலையம் அமைக்க அனுமதி வழங்கியது.
இதையடுத்து, தகுதி வாய்ந்த ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியில், மின் வாரியம் ஆர்வம் காட்டி வருகிறது.
கருத்து கேட்பு கூட்டம்:
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:செய்யூர் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக, பல முறை மக்கள் கருத்து கேட்பு கூட்டம் 
நடத்தப்பட்டது. இதில், பெரும்பாலான மக்கள் ஆதரவு அளித்தனர்.இதனால், மக்கள் ஆதரவோடு, செய்யூர் அனல் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.உடன்குடி அனல் மின் நிலையம் அமைக்க தேர்வு செயப்படும், தகுதி வாய்ந்த நிறுவனம், தன் சொந்த செலவில், திட்ட பணிகளை முடிக்க வேண்டும். பின், அந்த நிதியை மின்சார வாரியம் வழங்கும். இதன்மூலம், குறிப்பிட்ட காலத்திற்குள் அனல் மின் நிலைய பணிகள் முடிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments :

Post a Comment