உழைப்போம்

Saturday, December 7, 2013

மின் கணக்கீட்டில் முறைகேடுகளை தடுக்க வருகிறது ரிமோட் மீட்டர்கள் : தமிழக மின்வாரியம் அதிரடி திட்டம் மின் கணக்கீட்டில் முறைகேடுகளை தடுக்க வருகிறது ரிமோட் மீட்டர்கள் : தமிழக மின்வாரியம் அதிரடி திட்டம் பாரதிய மஸ்தூர் மின் ஊழியர் சம்மேளனத்தின் செயல் தலைவர் முரளி கிருஷ்ணன் கருத்து.

முறைகேடுகள் மற்றும் வருவாய் இழப்பைத் தடுக்கும் வகையில், புதிய ஸ்மார்ட் ரிமோட் மீட்டர்களை பொருத்த தமிழக மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால், ஆண்டுக்கு ரூ.1,000 கோடி ரூபாய் இழப்பைத் தடுக்க முடியும் என்று மின் வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

சுமார் 53,000 கோடி ரூபாய் கடனிலும், மின் தட்டுப்பாட்டிலும் தவிக்கும் தமிழக மின் வாரியம், மின்சார பயன்பாட்டு கட்டணத்தில் முறைகேடுகளைத் தடுக்க புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இதற்காக, ரேடியோ அலைக்கற்றை மூலம் செயல்படும், எல்.பி.ஆர்.எப்., எனப்படும் ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த திட்டமிட்டுள்ளது.
இந்த மீட்டர்களை நுகர்வோரின் கட்டடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பொருத்தினால், கணக்கெடுப்பாளர்கள், ஒரு இடத்தில் நின்று கொண்டு, நவீன ரேடியோ அலைக்கற்றை கையடக்க கருவி மூலம், ஒரே நேரத்தில் 60 மீட்டர் சுற்றளவில் உள்ள நூற்றுக்கணக்கான மீட்டர் பதிவுகளை, ஒரே நேரத்தில் பதிவு செய்ய முடியும்.
மீட்டர்களிலுள்ள மின் அளவுகள் அலைக்கற்றை மூலம், ஒரு சில நொடிகளில் கையடக்க கருவியில் பதிந்துவிடும். பின் அதனை கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த மீட்டர்கள், திருச்சி மாவட்டத்தில் சுமார் 150 இடங்களில் சோதனை அடிப்படையில் பொருத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்ட சியான் நிறுவனம் இந்த மீட்டர்களை விநியோகம் செய்ய முன்வந்துள்ளது.
இதுகுறித்து, மின் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மின் மீட்டர் கணக்கெடுப்பாளர்களில் சிலர், நேரடியாக நுகர்வோர் இடத்திற்கு சென்று கணக்கெடுப்பதில்லை. மாறாக சில நுகர்வோருடன் கூட்டு சேர்ந்து கையூட்டு பெற்றுக் கொண்டு, மீட்டர் கணக்கெடுப்பை முறைகேடாக குறைத்து பதிவு செய்கின்றனர். குறிப்பிட்ட மாதங்களுக்கு பின், மீட்டரில் கோளாறு என்று கூறி, அந்த மீட்டரை கழற்றுவதற்கு பரிந்துரை செய்கின்றனர்.
இதனால், முறைகேடுகள் நடந்ததை உறுதி செய்ய முடியாமல், புதிய மீட்டரை பொருத்துவதால், சம்பந்தப்பட்ட ஊழியரும், நுகர்வோரும் சட்ட நடவடிக்கைக்கு உட்படாமல் தப்பித்து விடுகின்றனர்.
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் சமீபத்தில், இதுபோன்று நடந்த குற்றத்தின் கீழ் 3 ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
எனவே, இனி வரும் காலங்களில் முறைகேட்டைத் தடுக்க, எலக்ட்ரானிக் ரிமோட் மீட்டர் கணக்கெடுப்புக்கு முடிவு செய்துள்ளோம் என்று மின் துறை அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில், முறைகேடுகள் குறித்து, பாரதிய மஸ்தூர் மின் ஊழியர் சம்மேளனத்தின் செயல் தலைவர் முரளி கிருஷ்ணனிடம் கேட்டபோது, ‘சிவகாசி, காஞ்சிபுரம் போன்ற இடங்களில் இதுபோன்ற முறைகேடுகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
ஆனால் அவற்றில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கும் தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும், ஊழியர்கள் பற்றாக்குறையும் தவறுகளுக்கு காரணமாகிறது. எனவே, நவீன மீட்டர்கள் வந்தால் ஊழியர்களின் பணிச்சுமை குறையும் என்றால் அதை நிச்சயம் வரவேற்போம்’ என்றார்.

No comments :

Post a Comment