உழைப்போம்

Wednesday, December 11, 2013

மின்சார வாரியத்தில் காலியிடங்கள் நிரப்ப பதிவு மூப்பை செயல்படுத்த பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனம் கோரிக்கை தினமலர் செய்தி.

சேலம்: தமிழ்நாடு மின்சார வாரியத்தில், உதவி பொறியாளர், தொழில் நுட்ப உதவியாளர், கணக்கீட்டாளர், உதவியாளர் என, 6,400 பணியிடங்களை, வாய்வழி தேர்வு, அரசியல் கட்சியினர் பரிந்துரை மூலம் நியமிப்பதற்கு, மின்வாரிய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில், 1.40 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவற்றில், 62,000 பணியிடங்கள் காலியாக கிடக்கிறது. மின் கட்டண உயர்வுக்கு முன், வாரியம், 50,000 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை சந்தித்து வந்தது. அதனால், காலியிடம் நிரப்புவதில் இழுபறி நிலை நீடித்தது. தற்போது, மின்வாரியம் சற்று லாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உதவியாளர், கணக்கீட்டாளர் மற்றும் தொழில் நுட்ப பணியாளர்கள் நியமனத்தை, மின்வாரியம் மேற்கொண்டுள்ளது.
உதவியாளர் பணியிடத்தை பொறுத்தவரை, 10,000 இடம் காலியாக உள்ளது. ஆனால், 4,000 பணியிடத்துக்கே ஆட்கள் எடுக்கப்படுகிறது. கணக்கீட்டாளர் பணிக்கு, 7,000 காலியாக உள்ள நிலையில், 1,000 பணியிடத்துக்கு மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவை தவிர, 400 உதவி பொறியாளர், 1,000 தொழில் நுட்ப உதவியாளர் பணியிடமும் நிரப்பப்படுகிறது.
கடந்த, 15 ஆண்டுகளாக, மின்வாரிய காலிப்பணியிடங்கள் அனைத்தும், பணபலம் மற்றும் அரசியல் பலம் உள்ளவர்களுக்கே கிடைத்துள்ளது. அமைச்சர்களும், அதிகாரிகளும், பணம் பெற்றுக்கொண்டு, காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கு வசதியாக, வாய்மொழித் தேர்வை நடத்தி வருகின்றனர். தற்போதும், அந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
அதில், நேர்முகத்தேர்வுக்கு மொத்தம், 100 மதிப்பெண், வாய்வழி கேள்விக்கு, 15 மதிப்பெண்ணும், பள்ளி, கல்லூரியில் பெற்ற மதிப்பெண், 100ஐ, 85 சதவீதமாக மாற்றம் செய்து, இரண்டையும் சேர்த்து மொத்த மதிப்பெண் அடிப்படையில், ஜாதி வாரியாக ஆள் தேர்வு நடக்கிறது. பள்ளி, கல்லூரியில் குறைந்த மதிப்பெண் பெற்றவர், அரசியல் பலத்துடன் பணியில் சேர்ந்து விடுகின்றனர். இதற்காக, தேர்வு நடத்தும் போது, அதிகாரிகள் பேனாவை பயன்படுத்தாமல், பென்சிலை பயன்படுத்துவதாக புகார் உள்ளது. 90 சதவீத பணியிடங்களுக்கு ஆள் தேர்வு, இந்த முறையிலேயே நடந்துள்ளதால், ஊழியர் சங்கத்தினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மற்ற துறைகளில், வேலைவாய்ப்புக்கு பதிவுமூப்பை அமல்படுத்தும் நிலையில், மின்வாரியத்தில் மட்டும் விதிவிலக்காக இருப்பது, பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பாரதீய மின் தொழிலாளர் சம்மேளனத்தின், சேலம் மண்டல நிர்வாகி பாலசுப்ரமணியன் கூறியதாவது:மின்வாரியத்தில், 60,000 பணியிடத்துக்கு மேல் காலியாக உள்ளது. ஆனால், குறைந்த எண்ணிக்கையில் தான் நியமனம் நடக்கிறது. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பை புறக்கணித்து விட்டு, வாய்வழி தேர்வு, பள்ளி, கல்லூரி மதிப்பெண் கணக்கீடு முறையை செயல்படுத்துவதால், வேலைவாய்ப்பற்றோர் பாதிக்கப்படுகின்றனர். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர, பல்வேறு சங்கத்தினரும் முடிவு செய்துள்ளோம். டி.என்.பி.எஸ்.சி., அல்லது வேலைவாய்ப்பு அலுவலக அழைப்பு மூலமே பணியிடத்தை நிரப்ப வேண்டும். இல்லையெனில், தகுதியற்ற ஊழியர்களால் மின்வாரியத்துக்கு பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments :

Post a Comment