உழைப்போம்

Thursday, December 19, 2013

ரூ.15க்கு சி.எப்.எல்., பல்ப் விற்க மின் வாரியம் முடிவு-தினமலர் செய்தி

குடிசை மின் இணைப்புகளுக்கு, ஒரு பல்ப், 15 ரூபாய் என்ற விலையில், சி.எப்.எல்., பல்புகளை விற்பனை செய்ய, தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம், தினசரி, 250 மெகாவாட் மின்சாரம் சேமிக்க முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


மத்திய மின் துறை அமைச்சகத்தைச் சேர்ந்த, எரிசக்தி திறனூக்க செயலகம் சார்பில், 'பச்சத் லேம்ப் யோஜனா' என்ற, விளக்கு மூலம் மின்சாரம் சேமிப்பு என்ற திட்டம், 2009, பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, மீட்டர் பொருத்தப்பட்ட, வீட்டு மின் நுகர்வோருக்கு, திறன் குறைந்த குண்டு பல்புக்கு பதில், அதிக திறன் கொண்ட, சி.எப்.எல்., பல்ப், 15 ரூபாய் என்ற விலையில், அதிகபட்சம், நான்கு பல்புகள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. 

தமிழகத்தில், மின்சார வாரியம் சார்பில், 2010 செப்டம்பரில், முதல் கட்டமாக, கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில், 1,167 வீட்டு மின் நுகர்வோருக்கு, தலா, 15 ரூபாய் விலையில், சி.எப்.எல்., பல்புகள் விற்பனை செய்யப்பட்டன. சி.எப்.எல்., பல்பு தயாரிப்பின் முக்கிய மூலப்பொருளான, 'பாஸ்பரஸ்' விலை உயர்ந்ததால், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தவில்லை. இந்நிலையில், 14.62 லட்சம் மீட்டர் பொருத்தப்பட்ட, குடிசை மின் இணைப்புகளுக்கு, 15 ரூபாய் விலையில், சி.எப்.எல்., பல்பு விற்பனை செய்ய மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, 14.62 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. முதலில், இத்திட்டத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படுத்தவும், பின் படிப்படியாக, அனைத்து மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படுத்தவும், மின்சார வாரியம் திட்டமிட்டு உள்ளது. 

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''அரசு துறை நிதி நிறுவனங்களிடம் இருந்து, நிதியுதவி பெற்று, 100 ரூபாய் அடக்க விலை கொண்ட, ஒரு சி.எப்.எல்., பல்பு, 15 ரூபாய்க்கு விற்கப்பட உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

100 மணி நேரம் ஒரு யூனிட்: வீடுகளில் பயன்படுத்தப்படும், 100 வாட்ஸ் குண்டு பல்பு, 10 மணி நேரம் எரிந்தால், ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும். அதேசமயம், 15 வாட்ஸ் சி.எப்.எல்., பல்பு, 100 மணி நேரம் எரிந்தால் மட்டுமே, ஒரு யூனிட் மின்சாரம் செலவாகும்.

No comments :

Post a Comment